Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

ஆன்மீகம்

திருப்பரங்குன்றம் * திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயில். குகைக்குள் தான் கருவறை என்பதால் சுற்றி வர முடியாது. முருகன் திருமணக் கோலத்தில் பீடத்தில் அமர்ந்து இருக்க, கீழே ஒரு புறம் மணப்பெண் தேவயானை அமர்ந்து இருக்கிறாள். மறுபுறம் நாரதர்! (இந்திரன் என்று சொல்வாரும் உண்டு! ஆனால் முனிவர் போல் தாடியும் உண்டு)

மேலே பறப்பது போல் பிரபையில் சூரிய சந்திரர்கள். விளக்கொளியில் இன்னும் நுட்பமாகக் கருவறையை நோக்கினால் விநாயகர், அசுவினி குமாரர்கள், அமரர்கள் என்று பலரும் உண்டு! மிக முக்கியமாக துர்க்கை அன்னையும், சிவபிரானும், பெருமாளும் கருவறையில் உள்ளார்கள். இப்படிச் சுற்றம் சூழ திருமணக் கோலமாகக் கருவறை உள்ளது!

* இங்கு முருகனுக்கு அபிடேகம் (திருமுழுக்கு) கிடையாது! அனைத்து அபிடேகங்களும் திருக்கை வேலுக்கே!
* கொடிமரத்தின் முன்பு மூன்று வாகனங்களையும் ஒரு சேரக் காணலாம்! எலி, நந்தி, மயில் என்று மூன்றும் முன்னிற்கும்! அதைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் சன்னிதிகளைக் காணலாம்! எல்லாமே குட்டிக் குட்டிக் குறுகலான குடைவரைகள் தான்!

* சிவபெருமான் பரங்கிரி நாதராய் எழுந்தருளியுள்ளார். அம்மை ஆவுடை நாயகி. திருப்பரங்குன்றத்து ஈசனைச் சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தேவாரத்தில் பாடியுள்ளனர்!
* நக்கீரர் திருமுருகாற்றுப்படையைச் செய்ததும் இங்கு தான்!

நக்கீரரும் முருகனும்
கார்க்கிமுகி என்னும் கொடும் பூதம் ஏற்கனவே 999 புலவர்களைப் பிடித்து அடைத்து வைத்தது; ஆயிரமாவது ஆளாக நக்கீரரையும் பிடித்துக் கொண்டது!
ஆலமரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்த நக்கீரர் முன்னால், வித்தியாசமான இலை ஒன்று விழுகிறது! அதுவும் பாதி இலை நீரில், மீதி மண்ணில்!

நீரின் இலை மீனாகவும், மண்ணின் இலை பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்க, இது என்ன அதிசயம் என்ற ஆவலில், பார்க்கிறார் நக்கீரர்! தவம் கலையும் சமயமாகப் பார்த்துப் பிடித்துக் கொண்டது பூதம்!
உள்ளே இருக்கும் ஏனைய 999 பேர்களும், ஆயிரமாவது ஆளும் மாட்டிக் கொண்டாரே, இனி மொத்தமாக அழிந்தோம் என்று பயத்தில் நடு நடுங்க, அவர்களை ஆற்றுப்படுத்தி முருகனை நோக்கிப் பாடுகிறார் நக்கீரர்.

தன்னுயிர் காப்பதற்காக இல்லாது, இவர்களை ஆற்றுப்படுத்தவாவது உன்னை நிலைநாட்டிக் கொள் முருகா என்று இறைவனை வேண்ட, முருகனும் பூதத்தை அழித்து அனைவரையும் விடுவித்து அருள்கிறான்.



* திருமாலின் புதல்வியர் அமிர்தவல்லி, சுந்தரவல்லி. இருவரும் முருகனை விரும்பிச் சரவணப் பொய்கையில் தவம் இருந்தனர்.
அவதார (உதித்த) நோக்கம் நிறைவேறிய பின்னர் தாமே வேட்டு அவர்களை மணப்பதாக உறுதி அளித்தான் முருகன்!
அதன்படி அமிர்தவல்லி அமரர் தலைவன் இந்திரன் மகளாகத் தோன்றி, ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்படுகிறாள்;
சுந்தரவல்லி சிவமுனியின் புதல்வியாகத் தோன்றி நம்பிராஜனால் வளர்க்கப்படுகிறாள்!

சூர சங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே, வள்ளி அம்மையையும் வேட்டு, திருத்தணிகையில் மணம் புரிகிறார்.

இருவர் காதலையும் போராடிப் பெற்றே மணமும் மனமும் களிக்கின்றான் முருகன்! முன்னது போர்க்களப் போரின் பரிசு! பின்னது தினைப்புனப் போரின் பரிசு!

* பரங்குன்ற மலை மேலும் ஆலயம் ஒன்று உள்ளது. இஸ்லாமிய தலம் ஒன்றும் உள்ளது. அல்-சிகந்தர் என்றும் செகுந்தர் என்றும் சி-கந்தர் என்றும் கொண்டாடுகிறார்கள். முருகனின் தோழராகக் கருதப்படுகிறார். கதிர்காமத்தில் காணப்படுவதும் இவரே!
ஆனால் அண்மைக் காலங்களாக, கார்த்திகை தீபத்தின் போது, மதப் பிரச்சனைகள் கிளம்புகின்றன. இத்தனை ஆண்டு கால ஒற்றுமையை ஊதி அணைப்பதும் தகுமோ?
* கதிர்காமத்து முருகன் ஆலயத்திலும் தேவானை அம்மைக்குத் தனியான ஆலயம் ஒன்று உண்டு!


* திருப்பரங்குன்ற ஆலயத்தில் இருப்பது முருகனே அல்ல! அது ஒரு சமணத் தெய்வம், இல்லீன்னா ஜேஷ்டா தேவி! இறைவனின் முகத்தில் பெண் சாயல் தெரிகிறது என்று ஒரு பிரச்சனையும் கிளம்பியது.

தரமுள்ள ஆதாரங்கள் ஏதுமின்றி, திருப்பதி-திருமலையில் இருப்பது முருகன் தான் என்று முன்பு கிளப்பி விட்டதைப் போலவே, பரங்குன்றத்து இறைவன் முருகன் அல்லன் என்றும் கிளப்பி விடப்பட்டது. குகைகள் எப்பமே சமணர்கள் தான் சமைப்பார்கள், எனவே இது சமணத் தலம் என்று வீண் வாதங்கள் எழுந்து அடங்கின. இது பற்றி பொன்னியின் செல்வன்.காம்-இலும் சில இழைகள் ஓடின!

* நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் தரும் தேவானை அம்மையின் குறிப்பு:
மறுவில் கற்பின் வாணுதற் கணவன் - திருப்பரங்குன்றம்
தாவில் கொள்கை மடந்தையடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன் - திருவாவினன்குடி
வள்ளியம்மை பற்றித் தரும் குறிப்பு
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின், மடவரல் வள்ளியடு நகையமர்ந் தன்றே - திருச்சீரலைவாய்!